ஊட்டி : இந்தியாவின் முன்னணி பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் நிறுவனமான பிஸ்லரி இண்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட், நீலகிரியின் முக்கிய சுற்றுலா அடையாளமான ஊட்டி படகு இல்லத்தில் முழுமையான தானியங்கி தண்ணீர் ஏடிஎம் ஒன்றை நிறுவியது. இந்த ஏடிஎம்-ஐ நீலகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு ஐஏஎஸ் திறந்து வைத்தார். இந்த ஏடிஎம்-கள் சமூகத்திற்கு சுத்தமான, மலிவு விலையில் குடிநீர் கிடைப்பதை வலுப்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கின்றன.
இந்த ஏடிஎம்-கள், இப்பகுதியில் பொது குடிநீர் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவதற்கான பிஸ்லரியின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும். படகு இல்லத்தில் நிறுவப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்த ஒரு வாரத்தில் ஆர்.சி.டி.சி, மாரியம்மன் கோவில் தெரு, வணிகத் தெரு, ஷூட்டிங் ஸ்பாட் என மேலும் நான்கு இடங்களில் தண்ணீர் ஏடிஎம்கள் நிறுவப்படும். இவை குடியிருப்பாளர்கள், சுற்றுலாப் பயணிகள், தினசரி ஊதியம் பெறுபவர்களுக்கு பாதுகாப்பான, மலிவு விலை, சுகாதாரமான குடிநீரை வழங்குவதன் மூலம் சேவை செய்யும்.
திறப்பு விழாவில் பங்கேற்ற பிஸ்லரி இண்டர்நேஷனலின் நிலைத்ததன்மை, கார்பரேட் அஃபேர்ஸ் இயக்குநர் திரு. கே. கணேஷ் கூறுகையில், “சுத்தமான குடிநீர் ஒரு அடிப்படைத் தேவை. நீலகிரி மாவட்ட நிர்வாகத்துடனான எங்கள் கூட்டுமுயற்சி, குடியிருப்பாளர்கள், சுற்றுலாப் பயணிகளின் அதிகமாக வரும் இடத்தில், இந்த அத்தியாவசிய சேவையை வழங்க எங்களுக்கு உதவுகிறது. பெண்கள் தலைமையிலான சுயஉதவிக் குழுக்கள் இந்த அமைப்புகளை இயக்குவதால், இந்த முயற்சி பொது சுகாதாரத்தை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், கண்ணியமான வாழ்வாதார வாய்ப்புகள் மூலம் உள்ளூர் சமூகங்களை மேம்படுத்துகிறது” என்றார்.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு, ஐ.ஏ.எஸ். மேலும் கூறுகையில், “பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீரை உறுதிசெய்வது மாவட்டத்திற்கு ஒரு முக்கிய முன்னுரிமையாகும். ஊட்டி படகு இல்லத்தில் நிறுவப்பட்டுள்ள தண்ணீர் ஏடிஎம், ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களுக்கு சேவை செய்யும், அதேநேரத்தில் சுய உதவிக்குழு பெண்களுக்கு வருமான வாய்ப்புகளையும் உருவாக்கும். நீலகிரிக்கு நிலைத்ததன்மை கொண்ட தண்ணீர் வழங்கும் தீர்வுகளை கொண்டுவருவதில் பிஸ்லரி இண்டர்நேஷனலின் ஒத்துழைப்பை நாங்கள் பாராட்டுகிறோம்.” என்றார்.

No comments:
Post a Comment